சென்னை:
ங்கியில் வாங்கிய கடனுக்காக குண்டர்களை வைத்து மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ramdos-former
காட்டுமன்னார்கோயிலை அடுத்த அறந்தாங்கி கிராமத்தைச்சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் காட்டுமன்னார்கோயில் கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் டிராக்டர் கடன் வாங்கியுள்ளார்.
உழவு உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு டிராக்டரை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வங்கிக் கடனை அடைப்பது தான் அவரது திட்டமாகும். ஆனால், போதிய வருவாய் கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக அவரால் கடன் தவணையை செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், வங்கியின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு நேற்று முன்நாள் முத்து ராமலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற குண்டர்கள் சிலர், 5-ஆம் தேதிக்குள் வங்கிக் கடனை கூடுதல் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தாவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் டிராக்டரை குண்டர்கள் உதவியுடன் வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து விடுமோ என அஞ்சிய முத்துராமலிங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் வங்கிக் கிளைக்கு சென்று முறையிட்டுள்ளார். வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.
ஆனால், டிராக்டரை பறிமுதல் செய்வதில் வங்கி நிர்வாகம் உறுதியாக இருந்ததால் தம்மிடமிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்பது முத்துராமலிங்கம் உள்ளிட்ட உழவர்களின் நோக்கம் அல்ல. வீராணம் ஏரி வறண்டு கிடப்பதால் கடந்த சில ஆண்டுகளாக டிராக்டர் மூலம் முத்துராமலிங்கத்துக்கு வருவாய் கிடைக்கவில்லை.
இந்த சூழலை புரிந்து கொண்டு கடனை திரும்பச் செலுத்த வங்கி நிர்வாகம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். மாறாக, குண்டர்களை அனுப்பி மிரட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் முத்துராமலிங்கம் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.
மக்களுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் மீளமுடியாத கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு உதவ வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
எனவே, தனியார், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
முத்துராமலிங்கத்தின் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.