பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் சிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் ஜாலியாக இருந்தாகவும், தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சிறைத்துறை டிஐஜி சத்தியநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஓய்வுபெற்றார். அதைத்தொடர்ந்து ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, முன்னாள் சிறைத்துறை டிஐஜி உள்பட பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை சூப்பிரண்டு மற்றும் சூப்பிரண்டாக இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவின் சொகுசு வாழ்க்கை குறித்து தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் டிஜிபி சத்திய நாராயணா கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநில முதல்வர் சித்தராமையா கூறியதால்தான் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கினேன் என்று தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஜனாதாதளம் எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சிறைத்துறை அதிகாரி கூறியிருப்பது உண்மையா என்றும் கேள்வி விடுத்துள்ளார்.
ஒருவேளை, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க சித்தராமையா அறிவுறுத்தி இருந்தால் அதற்கும் சித்தராமையாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், மாநிலத்தில் அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு நியாயம், பணக்காரர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பிய குமாரசாமி, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சென்னப்பட்டணா தொகுதிகளில் என் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட மாட்டார்கள். மீறி யாரேனும் போட்டியிட்டால் நானே போட்டியில் இருந்து விலகி கொள்வேன் என்றும் கூறினார்.