டெல்லி: வேளாண் சட்டங்கள் மாற்ற முடியாத மதநூல்கள் அல்ல. பாஜகவும் எதிர்க்கட்சி வரிசையில் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என காஷ்மீர் மாநில எம்.பி.   ஃபரூக் அப்துல்லா ராஜ்யசபாவில் கூறினார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் 78வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், நடைபெற்று வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் விவசாயிகள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவைில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில எம்.பி.யுமான  ஃபரூக் அப்துல்லா பேசும்போது,  ”விவசாயிகள் பிரச்சினையில் நான் உங்களுக்கு வைக்கும் கோரிக்கை என்பது என்னவென்றால், நாம்தான் வேளாண் சட்டங்களை இயற்றி இருக்கிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திருத்தம் செய்யக்கூடாது என்பதற்கு அவை ஒன்றும் மதம் சார்ந்த வேதநூல்களோ புனித நூல்களோ அல்ல. இந்த விவகாரத்தில் விவசாயிகளுடன் பேசி ஒரு தீர்வுக்கு மத்திய அரசு வர வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவும் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும்,  நான் இரு கரம் கூப்பி உங்களிடம் கேட்கிறேன். விவசாயிகள் பிரச்சினையில் கவுரவம் பார்க்காதீர்கள். இது நம்முடைய தேசம். இந்த தேசத்தை நாம் அனைவரும் சார்ந்தவர்கள். இந்த தேசத்தை நாம் சார்ந்தவர்களாக இருந்தால், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். விரைவில் தீர்வோடு வாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.