டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது. மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும், நாடு முழுவதும் 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம், எனவிவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்று விவசாயிகள் பிடிவாதாக உள்ளனர். இது தொடர்பான போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது. கடும் குளிரிலும்  போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை போராட்டங்களில் பங்கேற்றவர்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை நடத்தப்பட்ட 11 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி 26ந்தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

டெல்லி எல்லைகளான  சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், பல இடங்களில் விவசாயிகளுக்கு எதிராக பொதுமக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.  இந்த நிலையில், பொதுமக்களிடையே ஆதரவை பெறும் வகையில்,  ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பொதுமக்கள், விவசாயிகள் இடையே மகாபஞ்சாயத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிஷான் யூனியன்  சங்கத்தலைவர்  ராகேஷ் திகாயத்,  எங்களது டெல்லி போராட்டம் அக்டோபர் 2-ந் தேதி வரை தொடரும். அதற்கு பின்னர் நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தவர், இப்போது 4 லட்சம் டிராக்டர்களை கொண்டு பேரணி நடத்தினோம். இனி 40 லட்சம் டிராக்டர்களை வைத்து போராட்டம் நடத்துவோம் என்று கடுமையாக சாடினார்.

மேலும்,  மகாபஞ்சாயத்து கூட்டங்கள் ஒன்றும் தடை செய்யப்பட்டவை அல்ல. அவற்றை நடத்துவதற்கு உரிமை உண்டு. அதில் நான் பங்கேற்கவும் உரிமை உண்டு. தன் வாழ்நாளில் ஒரு போராட்டத்தில் கூட பிரதமர் மோடி பங்கேற்றது இல்லை. அவருக்கு விவசாயிகளை பற்றி என்னதான் தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.