சென்னை: திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரபல யுடியூபர் சாட்டை முருகன், ஃபாக்ஸ்கான் குறித்து வதந்தி பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். அவர்மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.
யுடியூபர் சாட்டை முருகன்மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என சகட்டு மேனிக்கு அனைத்து தரப்பினர்மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசுவதால், அவரை பலமுறை காவல் துறையினர் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர். கடந்த ஆண்டு, ‘திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி’ என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினை கேலியாகச் சித்திரித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்தும் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் பூந்தமல்லி அருகே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட சாட்டை முருகன் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.