சிவசேனாவின் ஆதித்யா தாக்கரேவை தொலைக்காட்சி நேரலையின்போது விமர்சித்த வட இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளரான அஞ்சனா ஓம் காஷ்யப்பை, சமூக வலைதளத்தில் பலரும் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு வருகின்றனர்.

பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடே நிறுவனம் சார்பில் மும்பை கான்கிலேவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு, அடுத்த வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆதித்யா தாக்கரே பேசி வந்தார். இந்நிகழ்ச்சி, இந்தியா டுடே நிறுவனத்தின் இந்தி மொழிக்கான தொலைக்காட்சியான ஆஜ் தக்கில் நேரலை செய்யப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சியில் பணி செய்யும் பிரபல ஊடகவியலாளரான அஞ்சனா ஓம் காஷ்யப், “மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே பேசி வருகிறார்” என்று கூறியதோடு, தனது மைக் ஆன் செய்யப்பட்டிருப்பதை உணராமல், “சிவசேனாவின் ராகுல் காந்தி ஆதித்யா தாக்கரே” என்று தன் சக ஊழியர் ஒருவரிடம் பேசியுள்ளார்.

அஞ்சனா ஓம் காஷ்யப்பின் இந்த உரையாடல் நேரலையின் போது ஒளிபரப்பானதால், சிவசேனா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரம், அஞ்சனா ஓம் காஷ்யப்பை சமூகவலைதளத்தில் இதற்காக பலரும் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.