சென்னை: பாஜகவில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸின் கோட்டபாடி ராஜேஷ் தம்மை இணைத்துக் கொண்டார்.
அறம், ஐரா, குலேபகாவலி, தும்பா, க/பெ ரணசிங்கம் போன்ற படங்களை கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்தவர் கோட்டபாடி ராஜேஷ். தொடக்கத்தில் தனியார் வங்கியில் தென்னிந்தியத் தலைவராக இருந்தவர், பிறகு வேலையை உதறி கேஜேஆர் ஸ்டூடியோஸ் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். ராஜேஷின் பூர்வீகம் செங்கல்பட்டு ஆகும்.
இந்நிலையில் பாஜகவில் இன்று இணைந்துள்ளார் கோட்டபாடி ராஜேஷ். தமிழக பாஜக தலைவா் எல். முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். கடந்த மாதம், பாஜகவில் நடிகை குஷ்பு இணைந்தார். தமிழ் திரையுலத்தினர் பலரும் பாஜகவில் கட்சி உறுப்பினர்களாக உள்ளார்கள்.
குஷ்பு, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி. சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் எனத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை ஏற்கனவே இணைத்துக் கொண்டுள்ளார்கள்.