சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது. பிரபல இந்தி பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்தியாவின் பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி போன்றவர்களின் வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், செஸ் விளையாட்டில் முடிசூடா மன்னனாக திகழும் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார். விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இவர், சூசன் நினனுடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.
2013-ல் தனுஷ் நடித்த ரான்ஜானா என்கிற ,ந்திப் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் என இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்புக் குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.