வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், தனது குடும்பத்தின் பாரம்பரிய பைபிளைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைபிளுக்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது.

இந்த பைபிள் உருவத்தில் பெரியதாகும். இது கடந்த 1893ம் ஆண்டு முதல் ஜோ பைடனின் குடும்பத்தினரிடம் உள்ளது. இந்த பைபிளில் செல்டிக் சிலுவை பதிக்கப்பட்டிருக்கும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் ஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் இந்த பைபிளுக்கு முக்கியப் பங்குண்டு. இவர், அமெரிக்க செனட்டராகவும், அந்நாட்டின் துணை அதிபராகவும் பதவியேற்றபோதும், இதே பைபிளைப் பயன்படுத்தினார்.

இவரின் மகன் பியோ பைடன்கூட, டெலாவர் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றபோது, இதே பைபிளையேப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இன்னொரு விசேடம் என்னவென்றால், ஜோ பைடன் ஒரு பதவியில் அமருகையில், அந்தப் பதவியேற்பு தேதியும் இந்த பைபிளில் குறிப்பிடப்படும்.

இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அமெரிக்க அரசியல் வரலாற்றில், அதிபராக பதவியேற்கும் இரண்டாவது ரோமன் கத்தோலிக்க அதிபர் ஜோ பைடன்தான். அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்க அதிபராக பதவியேற்றவர் ஜான் எஃப் கென்னடி என்பது குறிப்பிடத்தக்கது.