வாஷிங்டன் :

மெரிக்க அதிபராக பொறுப்பேற்பவர்கள், தாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கும் நேரத்திலும், தங்கள் பதவி காலம் முடியும் நேரத்திலும், குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது வழக்கமான ஒரு நிகழ்வு.

அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றுடன் அதிபர் பதவியில் இருந்து விடைபெறுவதால், இன்று ஒரே நாளில் 143 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருக்கிறார்.

பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம், அதிபருக்கு மட்டுமே உள்ளது என்பதும், அவர் ஏன், எதற்காக கருணை காட்டினார் என்பது குறித்தும் யாரும் கேள்வி எழுப்ப இந்த சட்டத்தில் வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, 94 பேருக்கு பல்வேறு கட்டங்களில் பொது மன்னிப்பு வழங்கி இருக்கும் நிலையில் தனது ஆட்சி காலத்தில் மொத்தம் 237 பேருக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.

ஸ்டீவ் பன்னோன்

சில அதிபர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுபட, அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதை பழக்கமாக கொண்டபோதும், டொனால்ட் டிரம்ப் இதுவரை தனது குடும்பத்தாரை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

இந்த பட்டியலில் முக்கிய நபராக கருதப்படுபவர், அவரது முன்னாள் ஆலோசகரான ஸ்டீவ் பன்னோன். இவர் 2017 ம் ஆண்டு வரை டிரம்பின் முக்கிய ஆலோசராகராக செயல்பட்டார்.

அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் மதில் சுவர் அமைக்கும் பணியை துவக்கிய டிரம்ப் அதற்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டினார், இந்த நிதி திரட்டிய விவகாரத்தில் தனது சொந்த கட்சியினரிடமிருந்தே பணத்தை சுருட்டியதாக ஸ்டீவ் பன்னோன் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவரை பதவியில் இருந்து நீக்கியதோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இப்போது, அவருக்கு மன்னிப்பு வழங்கி இருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

முன்னதாக, தனது ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் என்று பலருக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன் பொது மன்னிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.