பொய் விளம்பர பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும்!  மு.க.ஸ்டாலின் 

Must read

கரூர்: பொய் விளம்பரம் செய்துவரும்  பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும், பொய் விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் பழனிசாமியின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியவர்,  அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது,  “உங்களைத் தேடி நாடி, உங்களிடத்தில் வாக்கு கேட்டு, ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

கரூர் தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடுகிறார் அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி,  அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சிவகாமசுந்தரி, குளித்தலைத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர், நகரக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரா.மாணிக்கம் ஆகியோருககு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக் கவேண்டும்.

இந்தத் தேர்தலையொட்டி இப்போது ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. அணி தான் வெற்றி பெறப்போகிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல். அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். மாலை முரசு தொலைக்காட்சியில் தென் மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஒரு செய்தியை ஒளிபரப்பி இருக்கிறார்கள். உடனே அந்தத் தொலைக்காட்சியை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். இவை எல்லாம் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியோடு முடியப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

பல்லாயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். ‘ஆகா – ஓகோ‘, ‘இந்திரன் – சந்திரன்’ என்று முதலமைச்சர் பழனிசாமியைப் புகழ்ந்து பாராட்டி, மக்களுடைய வரிப் பணமான அரசாங்கப் பணத்தில் விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். அரசாங்கப் பணம் என்றால் மக்களின் வரிப்பணம். அதில் எப்படிக் கொடுத்தீர்கள்?

பொய் விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் உங்களுடைய முகத்திரையை இந்தத் தேர்தலில் கிழிக்கப் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் கொள்ளை – ஊழல் – லஞ்சம் என்று ஒரு மோசமான ஆட்சியை பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நடத்திக் கொண்டிருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி எடுபிடி மட்டுமல்ல, உதவாக்கரை முதலமைச்சராக இருக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்களாக இருக்கின்றன.

ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். தவ்வி தவ்வி சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். நான் சொல்வது பொய்யா? அந்த காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களா? இல்லையா? ஆனால் அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்கிறார். பாம்பு, பல்லி விஷத்தை விட துரோகம் செய்வது தான் மிகப் பெரிய விஷம். நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. ஆதாரத்தோடு தான் சொல்கிறேன். இது அனைவரும் பார்த்த காட்சி தான். சமூக வலைதளங்களில் பரவிய காட்சி.

இப்படிப்பட்ட நிலையில், எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்த நாட்டை மதவெறி நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இன்றைக்கு பாஜக ஈடுபட்டிருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் துதிபாடி அடிமை எடுபிடி அரசும் துணை நிற்கிறது.

நான் சொல்கிறேன் – இது திராவிட மண். தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். இங்கு உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் பலிக்காது, எடுபடாது.

இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்தான். அதேநேரத்தில் நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதையும் மறந்து விடாதீர்கள். தன்மானத்தைக் காப்பாற்றுவதற்காகவும் நடக்கின்ற தேர்தல். நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க நடக்கின்ற தேர்தல்.

தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு உரையாற்றினார்.

More articles

Latest article