மும்பை:
மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தையும், குரூர குணம் கொண்டவர்கள் பணம் சம்பாதிக்கும் நேரமாக பார்த்து செயல்பட்ட அவல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

நாடு முழுவதும் போலி ரெம்டெசிவிர் மருந்துகள், போலி கருப்பு பூஞ்சை சிகிச்சை மருந்துகளும் சந்தையில் கொடிக்கட்டி பறந்தது.

இவ்வரிசையில் புதிதாக இணைந்திருப்பது உயிர்காக்கும் தடுப்பூசிகள்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 9 இடங்களில் முகாம் நடத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்டது அம்பலமாகி உள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்கள் கோவின் செயலியில் சான்றிதழை பெற சென்ற போது, அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடம், நேரம் குறித்து மாறுபட்ட தகவல் இடம்பெறவும் போலீசாரை அணுகியுள்ளனர்.

அப்போது போலீசார் விசாரித்த போது போலி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை போடுவதாக ஆயிரத்து 260 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக 2 மருத்துவர்கள் உள்பட 10 பேரை கைது செய்திருக்கும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மோசடி கும்பல் உப்பு கரைசல் நீரை செலுத்தி லட்சக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளது எனக் கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து தடுப்பூசி குப்பிகள் வாங்கப்பட்டு உள்ளது எனக் கூறியிருக்கும் போலீஸ் இணை ஆணையர் விஸ்வாஸ் நான்கரே பாட்டீல், மருத்துவமனை நிர்வாகம் வாங்கிய தடுப்பூசிகள் எண்ணிக்கையை விடவும் செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் சிவராஜ் பதாரியா, அவருடைய மனைவி நிதா பதாரியாவை கைது செய்துள்ளோம் என்றும் போலீஸ் இணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த விசாரணை நடக்கும் நிலையில், தானே நவ்பாடா பகுதியில் தலா ஆயிரம் ரூபாய் வசூலித்து 116 பேருக்கு போலி தடுப்பூசிகள் போடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதேபோன்று கொல்கத்தாவிலும் தடுப்பூசி முகாம்களில் போலி தடுப்பூசி போடப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

28 வயதாகும் டேபான்ஜான் டெப் என்ற இளைஞர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி எனஅடையாளம் காட்டிக்கொண்டு கைவரிசையை காட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலங்களில் மக்களுக்கு உணவு, உதவிப்பொருட்கள் வழங்கிய டேபான்ஜானிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் உதவி கேட்டுள்ளனர்.

இதனை சரியான நேரமாக கருதிய அவர் போலி தடுப்பூசி முகாம்களை நடத்தி கைவரிசையை காட்டியுள்ளார். அங்கும் 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மிமி சக்ரபோர்த்திக்கும் போலி தடுப்பூசியை செலுத்தியிருக்கிறது, மோசடி கும்பல்.

தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி வராத நிலையில், மோசடி வெளியே தெரியவந்துள்ளது.

டேபான்ஜானை கைது செய்த போலீசார், போலி தடுப்பூசிகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.