ரூ. 30 ஆயிரம் வசூலித்த ‘கொரோனா பாபா’’ கைது..

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹபீஸ்பேட்டை என்ற பகுதியில்,இஸ்மாயில் என்பவர்  காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளை பிரார்த்தனை மூலம் குணமாக்கி வந்ததாக தெரிகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்த ’’தொழில்’’ செய்து வந்தார்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிரார்த்தனை மூலம் கொரோனா விரட்டப்படும் என விளம்பரம் செய்து சில வாரங்களாக இவர் பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளார்.

 வைரசுக்கு பயந்த ஏராளமான நோயாளிகள் இவரது மையத்தில் குவிந்தனர். அவர்கள் கொரோனாவில் இருந்து விடுபட இவர் பிரார்த்தனை செய்துள்ளனர்.

இதனால் இவரை ‘கொரோனா பாபா’’ என்றே அழைத்து வந்தனர்.

தலா 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் இஸ்மாயில் வசூலித்து வந்துள்ளார்.

அப்பாவி பொதுமக்களை இவர் ஏமாற்றுவது மியாபூர் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தானாகவே இஸ்மாயில் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இஸ்மாயிலையும், அவரது கூட்டாளியையும் கைது செய்துள்ளனர்.

இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த இரண்டு பேர் , போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் பலர் வாக்குமூலம் தர தயாராக இருப்பதாக தெரிவித்த போலீசார், கைதான ’கொரோனா பாபா’ விடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-பா.பாரதி.