கோவை: போலி ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைகள் ஹால் மார்க் முத்திரை பெற்றிருக்க வேண்டும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையிலான இந்த முத்திரை இடப்படாத நகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல கடைகளில் ஹால் மார்க் இல்லாத நகைகளும், போலி ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பான புகாரின் பேரில், கோவையில் உள்ள நகைக்கடைகளில், போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி பகுதிகளில் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த தங்கத்தை விற்பனை செய்வதாக இந்திய தர நிர்ணய அமைவனம் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், இந்திய தர நிர்ணய அதிகாரி மீனாட்சி தலைமையில் 10 பேர் இரண்டு குழுவாக பிரிந்து ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அப்போது, போலியான முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கங்களை பறிமுதல் செய்தனர்.