எர்ணாகுளம்: சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதையொட்டி, அங்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண குவிந்து வருகின்றனர்.

சபரிமலை மண்டலபூஜை முடிந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையாக நாளை இரவு, சபரிமலையில்  மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். இதை காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.

முன்னதாக, மகர ஜோதியை முன்னிட்டு, ஐயப்பனுக்கு நகைகள் அணிவித்து  அழகுபார்க்கும் வகையில்,  பந்தள மகாராஜா வழங்கிய தங்க நகைகள் அடங்கிய ‘திருவாபரண’ ஊர்வலம், பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, பந்தளம் தர்மசாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க கால்நடை ஊர்வலமாக புறப்பட்டுள்ளது. இது திருவாபரண ஊர்வலம்  பெருவழிப்பாதை வழியாக சென்றை  நாளை (ஜனவரி 14ம் தேதி) மாலை சபரிமலை வந்தடையும். இந்த நகைகள் அடங்கிய 3 பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் தலைச்சுமையாக எடுத்துச்செல்லப்படுகிறது.

இதையடுத்து, நாளை  மதியம் 12.29 மணிக்கு சபரிமலையில் ‘மகர சங்கிரம’ பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பந்தளம் அரண்மனையிலிருந்து அரச பரம்பரையை சேர்ந்த உறுப்பினர் கொண்டுவரும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

அந்த நேரம் திருவாபரண ஊர்வலம் பம்பை, சரன்கொத்தி வழியாக சபரிமலை சன்னிதானம் வந்தடையும். அங்கு ஆபரணப்பெட்டியை சபரிமலை தந்திரி பெற்றுக் கொண்டு அதை ஐயப்பனுக்கு சார்த்துவார். மாலை 06.00 மணியில் இருந்து 06.30 மணிக்குள் மகா தீபாராதனை நடக்கும். பந்தள மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, அரசனாக, பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் ஐயப்பனுக்கு, தீபாரதனை காட்டும்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றும். அதே நேரம், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகம்.

மகர ஜோதியை தரிசிக்க சபரிமலை சன்னிதானம், ஹில்டாப், பாண்டித்தா தாவளம், புல்லுமேடு, பாஞ்சாலி மேடு, பருந்துப் பாறை, நீலிமலை, சரங்கொத்தி, மரக்கூட்டம் உள்ளிட்ட ஒன்பது வியூ பாயிண்ட்டுகளை தேவசம் போர்டு தயார்செய்து வைத்துள்ளன. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால்,  மலைப்பகுதி களில் மின்விளக்கு உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகரஜோதி தரிசனம் முடிந்ததும் சபரிமலை நடை ஜனவரி 20ஆம் தேதி வரை திறந்திருக்கும். பக்தர்கள் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஜனவரி இருபதாம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தினரின் ஆச்சார சடங்குகளுக்குப் பின் நடை அடைக்கப்பட்டு, சபரிமலையின் சாவி, மகாராஜா குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.