ஜெனிவா: இந்திய சந்தைகளில் ‘போலி’ கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக  உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுஉள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசிகள், புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து மத்தியஅரசு வாங்கி மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில்,  இந்தியா மற்றும்  உகாண்டா நாட்டின் சந்தைகளில் பெருமளவு போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் நடமாடுவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக,  தேசிய மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மருந்தியல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் அரசும், அதிகாரிகளும்  போலி கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விநியோகத்தை கண்டறித்து, அதை முழுமையாக தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், கோவிஷீல்டு  ‘போலி தடுப்பூசிகள் ஜூலை மற்றும் ஆகஸ்டு  மாதங்களில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில், சீரம் நிறுவனமும்,  தனது நிறுவனத்தின் பெயரில் சில போலி தடுப்பூசிகள் சந்தையில் விற்பனைக்கு உலவுவதாக வேதனைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.