சென்னை: தமிழகத்தில் தற்போது இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ந்தேதி காலையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  வரும் திங்கட்கிழமையுடன்  நிறைவடைய உள்ளது. தறபோது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் ஏறி இறங்கி இருந்து வருகிறது. இந்த நிலையில்,  ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெறும் முதலமைச்சர் தலைமையிலானா ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுகின்றனர்.

இதற்கிடையில், செப்டம்பர் 1ந்தேதி முதல்  9ம் வகுப்பு  முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்தும் நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் வழிபாட்டுத் தலங்கள், சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் முதல்வர்  ஆலோசிக்க இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், தற்போதைய ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.