தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்துபோவார்கள் என்பது யதார்த்தம். ஆனால் “தோல்வி அடைந்ததுதான் நல்லது” என்று நிர்வாகிகள் உற்சாகமாக வலம் வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
தே.மு.தி.கவில் அதுதான் நடக்கிறது!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெபாசிப் பறிபோகும் அளவுக்கு தோல்வி அடைந்தது தே.மு.தி.கழகம். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர்தான், “தோல்வி நல்லது…” என்று மகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்தார்கள்.
அவர்கள் நம்மிடம் பேசியதில் இருந்து…
“முந்தைய தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை வைத்து, தே.மு.தி.க.வுக்கு 10 சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக கட்சிக்காரர்கள்.. குறிப்பாக பிற கட்சி தலைவர்கள் நம்பினர். அதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தே.மு.தி.கவுடன் கூட்டணி வைக்க தி.மு.க., பா.ஜ.க. ம.ந.கூட்டணி அனைவரும் போட்டிபோட்டன.
ஒரே நேரத்தில மூன்று அணியினருடனும் பேச்சு வார்த்தை நடத்தியபடி இருந்தார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
யாருடன் தலைமை கூட்டணி வைக்கப்போகிறது என்பது தொண்டர்களுக்கு மட்டுமல்ல.. இரண்டாம் கட்ட தலைவர்கள் – நிர்வாகிகளுக்கே மர்மமாக இருந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்படைாயக அறிவிக்காவிட்டாலும், “இப்படித்தான் கூட்டணி இருக்கும்” என்று மேலிடத்தில் இருந்து தொண்டர்களுக்கு கோடிட்டு காட்டவாவது செய்வார்கள்.
ஆனால் தே.மு.தி.கவில், கேப்டனும், அண்ணியாரும், சுதீஷூம் மட்டுமே மற்ற கட்சி தலைவர்களுடன் மறைமுக பேச்சு நடத்துவதில் பரபரப்பாக ஈடுபட்டார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே இது குறித்து எந்தவி இன்ஸ்ட்ரக்சனும் தரப்படவில்லை.
அது மட்டுமல்ல… வெளியில் உலவிய செய்திகளை வைத்து, “தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதாக தொண்டர்களும், நிர்வாகிகளும் நம்பினார்கள். இதையடுத்து நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்க விருப்பமனு அளித்தார்கள். அவர்களிடம் எல்லாம் பெரும் பணத்தை “டெபாசிட்” (!) என்ற பெயரில் வாங்கிக்கொண்ட கேப்டன், திடுமென ம.ந.கூட்டணியுடன் அணி சேர்ந்தார். இதனால் பணம் கட்டியவர்கள் எல்லாம் பதைபதைத்து போனார்கள்.  “இந்த கூட்டணி வெற்றி பெறாது.. தி.மு.க.வுடன் அணி சேரலாம்” என்று முக்கிய நிர்வாகிகள் சொன்னதை கேப்டன் காது கொடுத்து கேட்கவில்லை.
இதையடுத்து கட்டிய பணத்தை திரும்பத்தரச் சொல்லி பலரும் கேட்க..  இப்போது இல்லை.. பிறகு தருகிறோம் என்று மேலிடத்தில் இருந்து பதில் வந்தது.
இப்படி தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் தன் குடும்பத்தினர் சொல்படியே கேட்டார் கேப்டன்.
அது மட்டுமல்ல… கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களை மதிக்காமல் பொது இடத்தில் வைத்து அடிப்பதும், உதைப்பதும் நடந்ததுதான் ஊருக்கே தெரியுமே…” என்று நிறுத்திய அந்த நிர்வாகிகள், கடந்த சில நாட்களாக விஜயகாந்த் நடத்தி வரும் ஆலோசனை பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள்.
“ஆனால் கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மமதை, இந்தத் தோல்விக்குப் பிறகு காணாமல் போயிருக்கிறது.
பொதுவாக கேப்டன் எங்களை அழைக்கிறார் என்றால் பயந்துகொண்டேதான் வருவோம். கூட்டத்தில் யாரையும் பேச விடமாட்டார். அவர் என்ன தீர்மானித்திருக்கிறாரோ, அதை பேசுவார். இடையே, சிலரை பெயர் சொல்லி எழுப்பி நிற்கவைத்து கடுமையாக திட்டுவார். எல்லாம், கேப்டனின் உடன் இருக்கும் சிலர் போட்டுக்கொடுப்பதால்தான்.
ஒருமுறை அப்போதைய எங்கள் கட்சி எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன், கூட்டத்துக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்துவிட்டார். உடனே அவரை வாசலிலேயே நிற்கும்படி உத்தரவிட்டார் கேப்டன். பள்ளக்கூட பிள்ளை மாதிரி, கூட்டம் முடியும் வரை வாசலிலேயே நின்றார் மாஃபா பாண்டியராஜன்.
ஆனால் இந்த முறை அப்படி இல்லை. அனைவரிடமும் கேப்டன் அன்பாக பேசினார். குறிப்பாக எங்களை பேசவிட்டார். “வெளிப்படையாக உங்க கருத்துக்களை சொல்லுங்க..” என்றார்.
download
நாங்களும், “தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காதது தவறு. இப்போதாவது ம.ந.கூட்டணியைவிட்டு விலக வேண்டும். உங்ளுடன் இருக்கும் சிலர் சொல்வதை அப்படியே நம்பி, மற்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள்.. கோபப்படாதீர்கள். குறிப்பாக பொது இடங்களில் நிர்வாகிகள் மீது கோபப்படுவதை நிறுத்துங்கள். அது உங்களுக்கும் எங்களுக்கும் மட்டுமல்ல.. ஒட்டுமொத்தமாக கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கிவிட்டது. மேடையில் பேசும்போது, குறிப்பு எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக, விசயத்துடன் பேசுங்கள்” என்றெல்லாம் சொன்னோம்.
இப்படி எல்லாம் முன்பு பேசவே முடியாது. ஆனால் இந்தத் தோல்வி, கேப்டனை பக்குவப்படுத்தி இருக்கிறது.
அக்கறையாக நாங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமல்ல…  இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் பலர் நகைகளை அடகுவைத்து, கடன் வாங்கித்தான் போட்டியிட்டனர் என்பதைச் சொன்னோம்.
அதற்கு கேப்டன், “கவலைப்படாதீங்க..  கஷ்டப்படுறவங்களுக்கு கட்சி உதவும்” என்றார். அதோடு, “கட்சி தோத்துடுச்சே அப்படின்னு வேறு கட்சிக்கு போக நினைக்காதீங்க.. “ என்றார்.
நாங்க அப்டியே நெகிழ்ந்துட்டோம். “என்னைக்கும் உங்ககூடத்தான் தலைவரே இருப்போம்”னு  சத்தியம் செஞ்சோம்.
கேப்டனை இந்த அளவுக்கு தன்மையனவரா மாத்தினது கடந்த சட்டமன்ற தோல்விதான். அதனாலதான் சொல்றோம் இந்தத் தோல்வி நல்லது.
இனி தன்னோட நிலை உணர்ந்து கேப்டன் நடந்துக்குவார்னு நம்பிக்கை இருக்கு. நிச்சயமா, அடுத்தடுத்த தேர்தல்ல தே.மு.தி.க. பெரிய அளவில் வெற்றி பெறும்” என்று சொல்லி முடித்தார்கள் அந்த நிர்வாகிகள்.