லண்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள் வழங்க வ‍ேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்ற மோசமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவும்பொருட்டு இந்தத் தகவல்கள் கோரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தப்படி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும், ஒரு நாடு இன்னொரு நாட்டின் பிரஜையை விசாரணை செய்யாது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ள முகநூல் நிறுவனம், இதன்மூலம் தனது பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.

“கிளவுட் சட்டம்” போன்ற நாடுகளின் கொள்கைகள் மூலமாக, முறையான சட்ட வேண்டுகோள்களை விடுத்து தேவையான தகவல்களைப் பெற முடியும் என்ற நிலையில், நிறுவனங்களுக்கு பின் கதவை கட்டமைக்க வேண்டிய தேவை இல்லை” என்று அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.