“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன.
பி.வி.எல். செல்வசுந்தரி
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேச வேண்டும் என்று நடராஜ் சொல்லியிருப்பதை வரவேற்கிறேன். நல்ல யோசனை இது.
ஆனால், “ பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் தங்கள் புகைப்படங்களை பதிய வேண்டாம்…. நண்பர்கள் பார்க்கும் வகையில் புகைப்படங்கள் பதிவிடும் ஆப்சனை தேர்வு செய்து கொண்டு பயன்படுத்துங்கள் “ என்று சொல்வவதா முற்றிலும் எதிர்க்கிறேன்.
இது முழுக்க முழுக்க பெண்களின் உரிமைக்கு எதிரான கருத்து. சுதந்திரம் அடைந்த நாட்டில் ஒரு பெண்கள் தங்கள் உரிமையை பயன்படுத்த முடியாத நிலைக்கு யார் காரணம்?
தவிர பேஸ்புக், வாட்ஸ்ஆப்களில் பதியும் புகைப்படங்களால் மட்டும்தான் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களா? வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு பிரச்சனைகள் இல்லையா?
ஒவ்வொரு நாளும் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று கொண்டே தான் இருக்கிறது,,, அதில் நன்மைகளும் உண்டு… தீமைகளும் உண்டு. அதை நாம் தான் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
முக்கியமான விஷயம் பெண்கள் பிரச்சனை எதிர்கொள்கிற தைரியம் அதிகம் வேண்டும். அதற்கு பெற்றோர்கள் அவர்கள் வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனை… அதை எப்படி சமாளித்தார்கள் என்பது போன்றவற்றை தங்கள் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும்.
நானும் பேஸ்புக்.. வாட்ஸ்ஆப் போன்றவற்றில் என் புகைப்படத்தையும், என் குடும்பத்தார் புகைப்படம் பதிவேற்றி உள்ளேன். சேலம் வினுப்பிரியாவுக்கு ஏற்பட்ட நிலை எனக்கு ஏற்பட்டால், கண்டிப்பாக மனம் தளர மாட்டேன். உயிரை மாய்க்க மாட்டேன்.
அந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதை நன்கு யோசித்து… அந்த பிரச்சனையில் இருந்து வெளிப்படுவேன். அதற்கான சுய அறிவும், படிப்பறிவும், பெற்றோர்கள் கொடுத்த வளர்த்த தைரியமும் என்னுடனே இருக்கிறது.