“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன.
கவிஞர் ராஜாத்தி சல்மா
படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர் என்று எல்லா தரப்பு ஆண்களும் ஒரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள் என்று தோன்றுகிறது.ஒரு குற்றம் நடந்தால், குற்றவாளியை நோக்கி கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறுவதை ஏற்க முடியவில்லை.
பிறகு எதற்காக காவல்துறை, நீதித்துறை, அரசு எல்லாம் இருக்கிறது?
காலம்காலமாக வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள், இப்போதுதான் வெளியில் வருகிறார்கள். அவர்களை மீண்டும் வீட்டுக்குள் பூட்டிவைக்கும் நிலைக்கு கொண்டு போக விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது.
இன்றைக்கு தமிழக்தின் முதல்வராக இருப்பவர் ஒரு பெண்தானே… அவர் தன் புகைப்படத்தை வெளியில் பரவக்கூடாது என்றால், சினிமாவிலேயே நடித்திருக்க முடியாதே.. பிறகு அரசியலுக்கும் வந்திருக்க முடியாதே!
அறிவுரை சொல்லவேண்டியது, லஞ்சம் வாங்கும் காவலர்களுக்குத்தான். சேலம் வினுப்பிரியா விசயத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிக்கவும் செய்தார்கள் காவலர்கள். அப்படி இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த பெண் பலியாகி இருக்க மாட்டாள் அல்லவா?
ஆகவே அறிவுரையை அங்கே செய்யுங்கள்.
(கருத்துக்கள் நிறைவு)
பேட்டிகள்: டி.வி.எஸ். சோமு