புதுடெல்லி: முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர், பாரதீய ஜனதா & இந்துத்துவா தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதையடுத்து எழுந்த ஒரு நெருக்கடியான சூழலில், சமூகவலைதளத்தில் பதியப்படும் கருத்துகளை கண்காணிப்பது தொடர்பான விவாதங்களும் நடவடிக்கைகளும் தொடங்கின.
ஏனெனில், இந்த விவகாரம் தொடர்பாக, முகநூல் நிறுவனத்தின் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில்தான், முகநூலில் பதிவேற்றப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகள் தொடர்பாக புதிய விதிமுறையை முகநூல் நிறுவனம் வகுத்தது.
இந்நிலையில், இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு பொறுப்பு வகிக்கும் முகநூல் நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரி மீதும் புகார் எழுந்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கூறப்பட்டுள்ளதாவது; அன்கி தாஸ் என்ற பெண்மணி, இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான முகநூல் நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
முகநூலில் எந்தக் கருத்து இடம்பெற வேண்டுமென்று முடிவுசெய்யும் குழுவை இவர் மேற்பார்வை செய்கிறவர். இந்நிலையில், தெலுங்கானாவின் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங் உள்ளிட்ட வேறுசில இந்துத்துவவாதிகளின் கருத்துகள் முகநூலில் வெளியாகும் வகையில் ஆதரவு காட்டினார்.
அதாவது, ராஜாசிங் பதிந்த பதிவுகளின் மீது, வெறுப்பு பேச்சுக்கான விதிமுறையை அமல்படுத்துவதற்கு அன்கி தாஸ் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. அதேசமயம், அன்கி தாஸின் விருப்பம் சார்ந்து மட்டுமே நிறுவனத்தின் வன்முறை-எதிர்ப்பு விதிமுறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங், வெறுப்புக்குரிய கருத்துகளை உமிழ்வதில் புகழ்பெற்றவர். ரோகிங்யா முஸ்லீம்களை சுட்டுக்கொல்ல வேண்டுமென பேசியவர்.
இந்துத்துவா தலைவர்களுக்கு எதிராக முகநூல் கண்காணிப்புக் குழு எடுக்கும் நடவடிக்கைகள், நிறுவன வணிகத்தைப் பாதிக்கும் என்ற கருத்தை முன்வைத்தவர் அன்கி தாஸ். எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா, முகநூல் நிறுவனத்திற்கான பெரிய சந்தையாக திகழ்கிறது.