சென்னை:

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஆளும் அ.தி.மு.க. நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடியது. இதன் ஒரு நிகழ்வாக கட்சி தலைமையகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல உருவச்சிலை திறக்கப்பட்டது.

இந்த சிலையில் முகம் ஜெயலலிதா போல் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே சில அமைச்சர்கள், “அது ஜெயலலிதா முகம்போலத்தான் இருக்கிறது. இல்லை என்பவர்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அல்ல” என்று காட்டமாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார், கூறுகையில், ‘‘அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டு வரப்படும்’’ என்றார்.

‘‘ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.