டில்லி

முகத்தின் மூலம் ஆதார் அடையாளம் காணும் வசதியை ஆதார் ஆணையம் வரும் ஜூலை 1 முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆதார் அட்டையை எரிவாயு மானியம், சிம் கார்டுகள், பான் கார்டுகள் மற்றும் பலவற்றிற்கு இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.   ஆதார் ஆணையம் வழங்கும் இந்த அட்டையில் விரல் ரேகைகள் மற்றும் கண் விழிகள் மூலம் அடையாளம் காணும் முறை உள்ளது.   வயதின் காரணமாகவும், கடும் உழைப்பின் காரணமாகவும் கைரேகைகள் அழிவது ஏற்படுகிறது,   அது மட்டும் இன்றி விழிகளும் வயதாவதால் பழுதடைந்து அடையாளம் காண இயலா நிலை உள்ளது.

சமீபத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த ரேகை மற்றும் விழி மூலம் அடையாளம் காண இயலாததால் ஆதார் அட்டைகள் வழங்கப்படவில்லை.   அதனால் அவர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை கிடைக்கவில்லை.   இது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மாற்று ஏற்பாடுகள் எதையாவது ஆதார் ஆணையம் கண்டறிய வேண்டும் என கூறி உள்ளது.

இந்நிலையில் ஆதார் ஆணையம் வரும் ஜூலை 1 முதல் முகம் மூலம் அடையாளம் காணும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.   இதன் மூலம் வயது முதுமையால் ரேகை சரியாக இல்லாதோர், விழி பழுது உடையோர் மற்றும் நோய் வாய்ப்பட்டதால் ரேகை பாழானோர் ஆகியோர் பலன் அடைவார்கள் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.   இவ்வாறு ரேகை மற்றும் விழி மூலம் அடையாளம் கண்டு கொள்ள முடியாதவர்களுக்காக இம்முறை அறிமுகப் படுத்தி உள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.