டில்லி:

புத்த மத தலைவர் தலாய்லாமா இந்தியா வந்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதை முன்னிட்டு மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் சில விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனா-இந்தியா இடையிலான உறவு தற்போது மிக பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.

இதனால் தலாய்லாமா பங்கேற்கும் இந்த விழாக்களில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த தலைவர்கள் கலந்தகொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பான கடிதம் ஒன்றை வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே கடந்த மாதம் 22ம் தேதி அமைச்சக செயலாளர் பி.கே.சின்காவுக்கு அனுப்பியிருந்தார். இதன் பின்னர் 4 நாட்கள் கழித்து தலாய்லாமா விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தலாய்லாமா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்படி ஒரு உத்தரவே வெளியிடவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தலாய்லாமா விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவாகவும், நிலையாகவும் உள்ளது. இந்திய மக்களால் மதிக்கப்படும், போற்றப்படும் மதத்தலைவர் தலாய்லாமா. இதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில், தனது மதரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள தலாய்லாமாவுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை’’ என்று தெரிவிககப்பட்டுள்ளது. எனினும் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அந்த அறிக்கையில் எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.