சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒருபுறம் மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து வரும் நிலையில், மற்றொருபுறம் மக்கள் தலையில் இடியை இறக்கி வருகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு என அனைத்து மக்கள் நலத்திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்போது பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் பூங்காங்களின் கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தி உள்ளது.
சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் (பெரிய உயிரியல் பூங்கா வகை), கிண்டி சிறுவர் பூங்கா (நடுத்தர வகை உயிரியல் பூங்கா), குரும்பபட்டி உயிரியல் பூங்கா, சேலம் (சிறிய வகை உயிரியல் பூங்கா) மற்றும் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் (சிறிய வகை உயிரியல் பூங்கா) ஆகிய நான்கு உயிரியல் பூங்காக்களின் பார்வையாளர்களை கட்டணத்தை அதிரடியாக தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022-ம் ஆண்டில், நாட்டிலேயே சிறந்த மிருகக்காட்சி சாலை என மதிப்பிடப்பட்டது. தற்போது, பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன.
மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா செயல்படுகிறது. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவைதமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இவை, பார்வையாளர்களிடம் இருந்து பெறப்படும் நுழைவுக் கட்டண வருவாய் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. உணவு, ஊதியம், அத்தியாவசிய மற்றும் கட்டாய பராமரிப்பு மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினங்களை சமாளிக்க கட்டண வருவாய் பயன்படுத்தப்படுகிறது.
சக்கர நாற்காலி கட்டணம் ரத்து: உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் அவற்றின்நுழைவுக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூ.25 ரத்து செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், வேன், டெம்போ, மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி வாகன கட்டணம் ரூ.100 -ல் இருந்து ரூ.150 ஆகவும், சஃபாரி வாகன கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.150 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்கள் குழுவாக வந்தால் 5 முதல் 17 வயது வரை ரூ.20 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் பெரியவர்கள் நுழைவுக் கட்டணம் ரூ.40-ல் இருந்து, ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலூர் அமிர்தி பூங்கா: சேலம் குரும்பபட்டி பூங்காவில் பெரியவர் கட்டணம் ரூ.20-ல்இருந்து ரூ.50 ஆகவும், 5 முதல்12 வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலூர் அமிர்தி பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.10-ல்இருந்து ரூ.30 ஆகவும் 5 முதல்12 வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.10 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.