விருதுநகர்: சாத்தூர் அருகே  இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர்  வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில், அதை குடித்து அப்பாவி மக்கள் 65 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசு,  பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் ஒரு கண்ணில் வெண்யையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்குமா? அல்லது அனைவரும் ஒன்றுதான் என்று நிதி  வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மீட்கப்பட்டு சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று வார இறுதி நாட்கள் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அதிக உயிர்சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில்ஆலையின் 3 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு தயாரிக்க வெடி மருத்து கலவை உருவாக்கியபோது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தென்மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள சிவகாசி,சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அடிக்கடி வெடிவிபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் நடைபெறும். இதுதொடர்பாக எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.