தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் இன்று தொடங்கியது.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக் கெட் கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது. முதல் தாள் தேர்வு இன்றும், நாளை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8ம் வகுப்பு வரை பணியாற்ற 2ம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.