ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி சேஷ்பால் வைத் சிஆர்பிஎஃப் வீரர்களை செலவை காரணம் காட்டி விமானம் மூலம் அழைத்துச் செல்லாதது தவறு என கூறி உள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்ததால் சிஆர்பிஎஃப் வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்ல கோரிக்கை விடப்பட்டது. ஆனால் சிஆர்பிஎஃப் தலைமை அதற்கு அனுமதி அளிக்கவில்லை. செலவு காரணமாக இந்த அனுமதி வழங்கப்படவில்லை. என கூறப்படுகிறது. அவர்களை 78 வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி இவ்வாறு வாகனங்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் அழைத்துச் சென்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மறைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்ரமணியன் மனைவியும் ஒரே நேரத்தில் எதற்கு 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றன என கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து காஷ்மீர் மாநில முன்னாள் காவல் அதிகாரி சேஷ்பால் வைத் செய்தியாளர்களிடம், “இந்த ஜம்மு – ஸ்ரீநகர் சாலைப்பயணம் அதிக நேரமாகும் பயணம் ஆகும். அதிலும் இந்த சாலை பனியின் காரணமாக பல வாரங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் வீரர்கள் வெகுநாட்கள் ஜம்முவில் காத்திருக்க நேரிட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே நான் வீரர்களை வான் வழியே அழைத்துச் செல்லலாம் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அரசு இதற்கு செலவை காரணம் காட்டி ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் இது தவறானது என நான் கணக்கிட்டு கூறி உள்ளேன். உண்மையில் அவர்களை தங்க வைத்து சாலை வழியே அழைத்துச் செல்வதை விட வான் வழியே பயணிக்க வைப்பதால் குறைந்த செலவே ஏற்படும் என நான் தெரிவித்துள்ளேன்.

சாலை சரியாக இருந்தாலே வீரர்கள் பயணம் கிளம்ப மூன்று நாட்கள் ஆகும். ஆனால் தற்போது அந்த வழி பனிப்பொழிவால் மூடப்பட்டு இருந்துள்ளது. அதனால் வீரர்கள் வாரக்கணக்கில் காத்திருக்க நேரிட்டுள்ளது. அதற்கான செலவும் அதிகமாகவே ஆகும்.

அத்துடன் பல இடங்களில் சாலை சீர் கெட்டு இருந்துள்ளது. அதனால் வீரர்கள் அதிக நேரம் பயணம் செல்ல நேரிட்டுள்ளது. இவை எல்லாம் கருத்தில் கொண்டால் செலவை காரணம் காட்டி வான் வழிப் பயணத்துக்கு அனுமதி அளிக்காதது ஒரு தவறான செய்கை ஆகும். ” என தெரிவித்துள்ளார்.