பெங்களூரு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி வரும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு அடிபணிய வேண்டாம் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இன்று எதிர்க்கட்சியினர் முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். நாடாளுமன்றத்திலும் தமிழக உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கௌடா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ் நாட்டில் தற்போது நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் மத்திய அரசை மிரட்டும் தந்திர நடவடிக்கைகளே ஆகும். கர்நாடக மாநில நலனுக்காக ம ஜ த கட்சியின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர்.
கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள 3 கோடி பேருக்கு குடிநீர் வசதியை காவிரி நீரில் இருந்து தான் பெற்று வருகிறோம். அதனால் தான் உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கான நீர் அளவை அதிகரித்தது. மத்திய அரசு எக்காரணத்தைக் கொண்டும் தமிழக போராட்டங்களுக்கு அடிபணிய வேண்டாம்” என கூறி உள்ளார்.
முன்னாள் பிரதமரான தேவே கௌடாவின் இத்தகைய பேச்சு தமிழக மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.