ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் அமைச்சர் அல்தாப் புகாரி அப்னி பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

370வது சட்ட பிரிவு ரத்து செய்வதை காஷ்மீர் மக்களால் நிரந்தரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாக கூறிய புகாரி, காஷ்மீரின் முக்கிய அரசியல்வாதி ஆவார்.

காஷ்மீரில் மக்கள் அடைய வேண்டிய அரசியல் நோக்கங்களுக்காக பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புகாரி கூறியிருக்கிறார். சையத் முகமது அல்தாப் புகாரி தனது புதிய அரசியல் கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பெயரை பிடிபி கட்சியின் முன்னாள் அமைச்சர் குலாம் ஹசன் மிர் முன்மொழிந்தார். முன்னதாக, அல்தாப் புகாரி வீட்டில் நேற்று நடந்த இரவு விருந்தில் அனைவரும் ஒருமனதாக புகாரியை தலைவராக தேர்ந்தெடுக்க ஒப்புதல் அளித்தனர்.

இந்த கூட்டத்தில், முகமது திலாவர் மிர், உஸ்மான் மஜீத், அய்ஜாஸ் அகமது கான், அப்துல் மஜீத் பேடர், முகமது அஷ்ரப் மிர் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று புகாரி தலைமையிலான தூதுக்குழு, ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்து இருந்தது.