திருச்சி:  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் ப்ளு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. மேலும், காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறது..

இந்த நிலையில்,  புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை அருகே உள்ள இலுப்பூரில் வசித்து வரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜய பாஸ்கர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் , சளி போன்ற நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சோதனை நடத்தியதில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கட்சியினர், அரசு இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.