நியூஸ்பாண்ட் தலைமறைவான செந்தில் பாலாஜி… குண்டாசில் கைது?

Must read

தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. தமிழகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சீடராக இருந்தவர் செந்தில் பாலாஜி. பிறகு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் தனி ஆவர்த்தன் செய்ய ஆரம்பித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தான் சிறை செல்ல வேண்டிய நிலையில் முதல்வர் பதவிக்கு இவரது பெயரையும் பரிசீலனையில் வைத்திருந்தார் சசிகலா. அதாவது எடப்பாடி பழனிசாமி அல்லது செந்தில் பாலாஜி என்பதுதான் சசிகலாவின் திட்டமாக இருந்தது.

இந்த நிலையில் எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த செந்தில் பாலாஜி அமைதியானார். அடுத்ததாக, கட்சியில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் என்று அணிகள் பிளவுபட்டன. பிறகு சசிகலா- தினகரன் அணி, மூன்றாவதாக உருவானது. இந்த மூன்றாவது அணிக்கு ஆதரவு அளித்தார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிமீதான மோசடி புகார் மீண்டும் கிளம்பியது. அதாவது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்.

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் வெங்கடாசலம் தலைமையிலான போலீஸார், கர்நாடகா மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, மில், உறவினர்கள் வீடு என்று அவருக்குத் தொடர்புள்ள இடங்களை வளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடங்களில் வருமானவரி சோதனையும் நடக்கிறது. தற்போது செந்தில் பாலாஜிமீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் சில பிரிவுகள் பாய தயாராக இருக்கின்றன என்கிறார்கள். இதை உணர்ந்துதான் செந்தில் பாலாஜி தலைமறைவாகிவிட்டார் என்றும் தகவல் உலவுகிறது.

அதே நேரம், “செந்தில் பாலாஜியை பிடித்து புதிய வழக்குகளை பதிவதோடு, அவர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி சிறையில் அடைக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக சினிமா பைனான்ஸியர் முகுந்த் போத்ராவை சொல்கிறார்கள். அதாவது, “வட்டிக்குக் கடன் கொடுத்துவிட்டு அதை வசூலிக்கும்போது மோசடியாக கூடுதல் கணக்குகளை எழுதி வசூலித்ததார்” என்பதுதான் அவர் மீதான புகார்.

இதையடுத்து அவர் மீது முதலில் 420 ஐ.பி.சி-தான் பதியப்பட்டன. பிறகு வழக்கின் போக்குக்கு ஏற்ப 465, 467, 468, 471, 506(2) மற்றும் கந்துவட்டி தடுப்புச் சட்டம் (2003) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குள் பதியப்பட்டன. இறுதியில் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதோபோல, செந்தில் பாலாஜியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று பேசப்படுகிறது. மேலும், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து தங்க தமிழ்ச்செல்வன், பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர் மீது வழக்குகள் பாயும்” என்றும் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

More articles

Latest article