டில்லி
ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு சோனியா காந்திக்கு முன்னாள் நீதிபதி கடிதம் எழுதி உள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவர் கே டி தாமஸ். இந்த அமர்வால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் கடந்த 1991ஆம் ஆண்டில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்றுள்ள நீதிபதி தாமஸ் ராஜிவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
முன்னாள் நீதிபதி தாமஸ் தனது கடிதத்தில், “குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை குறைக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளை அப்போதைய மத்திய அரசு எதிர்த்தது. தற்போது இந்தக் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. நீங்களும் ராகுல்ஜியும் (முடிந்தால் பிரியங்கா ஜியும்) இவர்களின் தண்டனையைக் குறைப்பதில் ஆட்சேபம் இல்லை என ஜனாதிபதிக்கு தெரிவித்தால் இத்தனை நாட்கள் சிறையில் வாடிய அவர்கள் விடுதலை ஆவார்கள். மத்திய அரசு உங்களின் கருத்தை ஏற்று விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடும்.
இது மனித நேயத்துடன் நீங்கள் அணுகி கருணை காட்ட வேண்டிய ஒரு விஷயம் ஆகும். ஒரு நீதிபதியாக நான் சட்டப்படி தண்டனை வழங்கி இருந்தேன். ஆனாலும், இப்போதைய சூழ்நிலையில் உங்களின் கருணையை வேண்டி இந்தக் கடிதம் எழுதி உள்ளேன். நீங்கள் இவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நான் எழுதியதில் தவறேதும் இருப்பின் மன்னித்து விடவும்” என குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 18ஆம் தேதியிட்ட இந்தக் கடிதத்தை தாம் அனுப்பியதாக ஊடகங்களிடம் முன்னாள் நீதிபதி தாமஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் சிபிஐ விசாரணையில் சில முக்கியக் குறைகள் உள்ளதாகவும் ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.