சென்னை:
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, இறந்த சிறுமியின் உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக சிறுமி இறந்துள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வியாழனன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, வீட்டு அருகே இருந்த உறவினர் மீனாட்சி சுந்தரம் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மீனாட்சி சுந்தரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மீதும் சிறுமி அன்பாக இருந்துள்ளார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட மீனாட்சி சுந்தரம், சம்பவத்தன்று, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
சிறுமியின் தாயாரும் தந்தையும் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
அவர்களுடன் சேர்ந்து மீனாட்சி சுந்தரமும் குழந்தையை தேடுவது போல் நடித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கவும் சென்றுள்ளார்.
வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது, பெற்றோரை வழிமறித்த அக்கம்பக்கத்தினர், சிறுமியின் உடலை வாளியில் அமுக்கி மீனாட்சி சுந்தரம் எடுத்துச் சென்றதாகக் கூறினர்.
பின்னர், சிறுமியின் வீட்டுக்குள்ளே வாளியில் அமுக்கப்பட்ட நிலையில் உடல் இருந்தது.
இதனையடுத்து, போலீஸார் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, சிறுமியின் பாதி தோடு, மீனாட்சி சுந்தரத்தின் படுக்கை அறையில் கிடந்தது.
இந்த விசயம் மீனாட்சி சுந்தரத்தின் மனைவிக்கும் தெரியும்.
சாட்சியங்களை அழிப்பதற்கு கணவனுக்கு மனைவி ராஜம்மா உதவியாக இருந்துள்ளார்.
இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.