சென்னை

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலாவை முன்னாள் பெண் அமைச்சர் கோகுல இந்திரா புகழ்ந்துள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி கே சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டார்.  தனது சிறைத் தண்டனைக்கு முன்பு அவர் அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றி அவருடைய ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.  சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்தார்.

சசிகலா தண்டனைக்காலம் முடிந்து விடுதலை ஆவதாகச் செய்திகள் வெளியானதில் இருந்தே அதிமுகவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இது குறித்து அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி சசிகலாவின் விடுதலை கட்சியில் எவ்வித பாதிப்பும் உண்டாக்காது எனத் தெரிவித்திருந்தார்.  அத்துடன் சசிகலாவுக்கு விடுதலைக்குப் பிறகு கவனிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளதால் அவரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடந்துள்ளது.  அதில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்துக் கொண்டுள்ளார். அவர் அந்த கூட்டத்தில், “சசிகலா நமது அம்மாவுடன் ஒரு தவ வாழ்க்கை நடத்தி வந்தார். எங்களுக்கு சசிகலா மீது நல்ல மரியாதை உண்டு.  அப்படி இருக்க சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் தவறாகப் பேசியதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என உரையாற்றி உள்ளார்.