#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி

நெட்டிசன்

திமுக செய்தி தொடர்பாளர்  – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு

————————————

ன்று காலை நடை பயணம் செல்லும்போது ஈவிகே சம்பத் அவர்களுடைய பிறந்தநாள் என்றும், நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி சோ.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள், அத்தோடு மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் (ஆர்விஎஸ்) நினைவெல்லாம் நினைவுக்கு வந்தது.

காமராஜர் காலத்தில், நாங்களெல்லாம் அரசியலில் இருந்தபொழுது, ஈவிகே சம்பத் அவர்களோடு தொடர்பு உண்டு. நெடுமாறன் மற்றும் ஈவிகே.சம்பத் அவர்களும், அண்ணன் தம்பியாக பழகிய நாட்களை எல்லாம் கண்களால் பார்த்ததுண்டு. அவரிடம் பல இயல்பான குணங்களை அறிந்துள்ளேன். ஒரு கடிதம் வந்தால் உடனே அதற்கு பதில் போஸ்ட் கார்டில் ஆவுது, நலம் நலமறிய ஆவா என்று எழுதி விடுவார். அதேபோல இன்றைக்கு செய்ய வேண்டிய பணிகளை, யாரோடு தொடர்பு கொள்ள வேண்டும், யாரோடு பேச வேண்டும், என்ன பணிகள் என்பதை குறித்து வைத்துக்கொண்டு செயல்படுவார். அருமையானஆங்கிலம் பேசுவார். பல நூல்களைக் அண்ணாவைப் போல கற்றவர். ஏதோ திமுகவிலிருந்து அவர் பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.

ஈவிகே சம்பத் பற்றி இன்னும் தமிழகம் நிறைய அறியப்படவில்லை. அவர்தான் அண்ணா கூறி, நாடாளுமன்றத்தில் திமுகவின் முதல் உறுப்பினராக சென்று, அவரோடு தர்மலிங்கம் சென்றார் என்று நினைக்கிறேன் திருவண்ணாமலையிலிருந்து. இட ஒதுக்கீடுக்கு, முதல் அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வந்தது சம்பத் தான். நேர்மையை நேரடியாக நேருவோடு மோதி சிக்கல்களை, சொல்லி, இந்தி மொழித் திணிப்பை இந்தியா தாங்காது என்பதை உணர்ந்து, அண்ணா கூறியது போல, அண்ணா கேட்டுக்கொண்டபடி, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்காதே, என்ற உத்தரவாதத்தை பெற்றவர் அவர் தான்.

இதெல்லாம் என் நினைவுக்கு வந்தது..யாருடன் அவர் பயணித்தாலும், தன்னோடு வந்தவர்களுக்கு வசதியான அறைகள் இருந்ததா, உணவு உண்டார்களா என்று காமராஜரைப் போல, அவரும் தெரிந்து கொண்டு தான், தான் தங்குகின்ற அறைக்கு செல்வது வாடிக்கை. இதெல்லாம் அவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள். அதேபோல அவரோடு வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.பி. சுப்பிரமணியம் போன்ற பலரும் அவரோடு தொடர்ந்து பயணித்தவர்கள்.

அதற்கடுத்து ஆர்.வி.சுவாமிநாதன், இவர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக சென்று, மத்திய அமைச்சராக இந்திரா காந்தி தலைமையில் இருந்த அரசியல் செயல்பட்டார். இவரின் சொந்த ஊர் பாகனேரி. இவர் மறைவுக்குப் பிறகு தான் ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. நல்ல மனிதர். டெல்லிக்கு சென்றால், இவருடைய வீட்டில் தங்குவது உண்டு. குளிர் காலத்தில் ஒருமுறை அங்கு சென்றபோது அவருடைய வீட்டில் தங்கினேன். குளிர் கடுமையாக இருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்த போது, யாரோ வந்து சென்றார்கள் என்று பார்த்தால், நான் படுத்திருக்கும் அறையில் எலக்ட்ரிக் ஹீட்டரை வைத்து விட்டு சென்றிருந்தார். அந்த அளவு பரிவோடு ஒரு அமைச்சர் இருந்தார் என்றால் அவருடைய இயல்புகளை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். அவர் தமிழகம் வந்த அண்ணல் காந்தியிடம், அதிகமான தொகையான அன்றைக்கு ஒரு நான்காயிரம் ரூபாய் வழங்கியது எல்லாம் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்கள், ஆலய பிரவேசம் செய்ய வேண்டும் என்று அன்றைக்கு அதற்காக போராடியவர். தமிழகத்தில் முக்குலத்தோர் பின்தங்கிய வகுப்பாக சேர்க்கப்படவேண்டும், அதேபோல குற்றப்பரம்பரை என்ற அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் கடுமையாக போராடியவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், குற்றபரம்பரை சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், சென்னை சட்டமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டு வந்து, அரசு மசோதா உடன் இணைந்து தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தார். விவசாயிகள் மீது அக்கரை கொண்டவர். நாங்கள் விவசாய சங்கத்தில் இருக்கும்பொழுது, நாராயணசாமி நாயுடு அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, இவரை சந்திக்க வைத்தேன். இரண்டு பேரும் விரிவாக சென்னையில் பேசியதெல்லாம் நினைவில் இருக்கின்றது. நாராயணசாமி நாயுடு ஈவிகே. சம்பத்தையும் சந்திக்கக் கூடிய வாய்ப்பும் அன்றைக்கு நடந்தது. 1948ல் ஆர்.வி.சுவாமிநாதன் அவர்கள் ஜமீன் ஒழிப்பு சட்டத்திற்கும் ஆதரவாக போராடியதெல்லாம் உண்டு. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். அப்போது நெடுமாறன் அவர்கள் பொதுச்செயலாளராக இருந்தார்.. கிராமப்புற மேம்பாடு, விவசாயிகள் நலன், பிற்பட்ட மக்களின் பாதுகாப்பு என்று தன் காலத்தில், தன் பணிகளை செய்து, அவர் கடந்த 1984 ல் அக்டோபர் நாலாம் தேதி காலமானார்.

அதேபோலவே, சோ.அழகர்சாமி என் மீது பாசம் கொண்டு என்னோடு பழகியவர். நான் அரசியலில் வளர வேண்டும் என்று நினைத்தவர். அரசியல் சூழ்நிலையால், அவரை எதிர்த்தே கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் 1989ல் போட்டியிட்டேன். விவசாயிகள் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் கதர் வேஷ்டி, கதர் சட்டை மேலே கதர் சிகப்பு மாதிரி துண்டு என்று சாதாரணமாக சைக்கிளில் பயணிப்பார். டீ கடையில் கிடைக்கின்ற எதையாவது சாப்பிட்டு கொண்டு, தன் பணியை மேற்கொள்வார்.

இவரோடு அன்றைக்கு மாணவர் காங்கிரசில் இருந்தபோது, விவசாயிகள் மற்றும் கிராமப்புற நலனுக்காக, இந்திரா அறிவித்த திட்டத்தின் படி நடைபயணம் எல்லாம் சென்றது உண்டு. அப்போது அந்த பயணத்தில், இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களாக இருக்கும் நல்லகண்ணு, மறைந்த எஸ்எஸ். தியாகராஜன் அன்றைக்கு இவரோடு இணைந்து பாடுபட்டார்கள். நெல்லை மாவட்டத்தில் ஒரு முக்கியமான புள்ளியாக திகழ்ந்தார். நெல்லை மாவட்டத்தில் அன்றைக்கு இவர் என்.டி வானமாமலை, நல்லகண்ணு போன்ற முக்கிய தலைவர்கள் இருந்த காலம். இன்றைக்கு அவருடைய நினைவு நாள்.

கோவில்பட்டி வட்டாரத்தில் 1966 மிகப்பெரிய பஞ்சம் அதனால் “வரிகொடா ” இயக்கத்தை முன்னெடுத்து சென்றார். வரிதராத விவசாயிகளின் கால்நடைகள், கருவிகள் ஜப்தி செய்யபட்டு மந்தையில் குவிக்கபட்டது அரசு நிர்வாகத்தின்சார்பில் ஏலம் ஆயத்தமானது ஜப்திசெய்யபட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு ஏலத்துக்கு விடுத்தது..

ஜப்தியானது ஏழைவிவசாயிகளின் கால்நடைகள் அதனால் எந்த விவசாயியும் அதை வாங்க வேண்டாம் என சொன்னார். அரசின் ஏலத்தை விவசாயிகள் புறக்கணித்தனர் அதனால் கால்நடைகள் எப்படி ஜப்தியின் பெயரில் அழைத்துசெல்லபட்டதோ அப்படியே மீண்டும் திரும்ப போய் அதே விவசாயிகளின் வீடுகளில் இவரால் கட்டபட்டது.இவர் 25ஆண்டுசட்டமன்ற உறுப்பினர்.நாளை 12ஆண்டு நினைவு நாள் (06-03-2020..)

இந்த மூவரையும் தமிழகம்அறியப்பட வேண்டியது அவசியம்.

#ksrpost
5-3-2022.