சென்னை: உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஈரோடு கிழக்கு  தொகுதி எம்.எல்.ஏ.,  ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நிலை சீராக உள்ளது. தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம்  செய்யப்பட்டு உள்ளார் என அவரை சந்தித்த தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதியில் கடந்த  பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் கடந்த 10ந்தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனா கார்கே, ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மல்லிகர்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து மாலை  நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அதைத்தொடர்ந்து,  நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.,

இதையடுத்து மருத்துவமனை சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர்  அவசர சிகிச்சை பிரிவில் இருந்து  சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன்வீடு திரும்புவார் என  தெரிவித்தார்.