சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியதுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஈரோடு கிழக்குதொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன், சந்தித்தார். அப்போது, வைகோ, அவரை, ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வேட்பாளராக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என கூறினார். இருவரும் சிலநிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, தனக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வைகோவிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். அதைனைத்தொடர்ந்து, திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரவு கோரினார்.
பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனிடம் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். இவிகேஎஸ் இளங்கோவனுடன், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ அசன் மௌலானா ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்தனர். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிக்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.