பேட்டி முதல் பாகம்:
ஒரு காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஷகிலா. செக்ஸ் பாம், கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தப்பட்டவர்.
இப்போது எப்படி இருக்கிறார் ஷகிலா?
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சி-கிளாஸ் ஃபிளாட் அது. ஆடம்பரம் எதுவும் இல்லை. சிறிய ஹால், இரும்பு கைப்பிடி கொண்ட சோபா. சிறிய இரண்டு அறைகள், கிச்சன்.
நாளொன்றுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிய கிளாமர் நடிகையின் அரண்மனை எங்கே? ஆச்சரியமாகத்தான் இருந்தது.
சின்னதாக மேக்கப் முடித்து வந்தவர் நம்மிடம் பேசினார்.
“அந்த ஷகீலா நாட்களை” நினைத்துப்பார்ப்பது உண்டா?
எப்படி மறப்பேன்..? நிறைய படங்கள்.. கை நிறைய வருமானம். சாப்பிடக்கூட நேரமில்லாம ஷூட்டிங் ஷூட்டிங் என பிஸி…எல்லோரும் காண விரும்புற ஒண்ணு என்கிட்டே இருந்துருக்கு.. ஆனா அதை விரும்புறேன்னு யாருமே மனம் திறந்து சொன்னது இல்லை..யாராவது தண்ணி போடுறதையும், சிகரெட் பிடிக்கிறதையும் பெருமையா சொல்லுவாங்களா.? அதுபோலத்தான் அன்றைய காலகட்ட நாட்கள்.. சொல்லப்போனா நடிப்பு போதைன்னு சொல்லலாம்.
எதுக்கு இப்படி ஒரு அடிக்ஷன் ஆனது.?
நான் எனக்கு கிடைத்த ரோல்கள் செய்தேன். அவ்வளவுதான். அதற்கு முன்பு ஒரு லட்சம் ரூபாயை நான் கண்ணில் பார்த்தது கூட கிடையாது. தொடர்ந்து வாய்ப்புகள்.. ஒருநாள் நடிக்க நாலு லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கேன். “அடடே என்னால ஒரு நாளைக்கு நாலு லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியுதே!” ந்ன்னு தோணிச்சு. அவ்வளவுதான். ஆனா எதிர்காலத்தில் இப்படி எல்லாம் பிரச்சனைகள் வரும்னு எதிர்பார்க்கவே இல்லை.
இப்படி ஒரு இமேஜ் வரும்னு உங்களுக்கு தோணலையா?
இல்லை. நான் நடிக்க மட்டும் தானே செய்தேன். புளூபிலிமில் நடிக்கலை தானே. என் கூட நடிச்சவங்கள்ல இரண்டு பேர் என்னோட பெரியப்பாவோட பசங்க. அவங்க கூடதான் நான் படுக்கை அறை காட்சிகளில் நடித்தேன். அப்புறம் அது நடிப்புங்குறதுனால எனக்கு எந்த வித மனப்புழுக்கமும் இல்லை. எனக்குத்தெரியும் அவங்க என்னோட அண்ணன்கள் என..அவங்களுக்குத்தெரியும் நான் அவங்களோட தங்கச்சி என…!
சம்பாதித்த பணத்தை எல்லாம் என்ன செய்தீங்க?
எல்லாம் போச்சு. அம்மா எல்லா பணத்தையும் அக்காகிட்டே கொடுத்தாங்க. நான் நேரம் காலமின்றி ஓடி ஓடி உழைத்து அவர்களிடம் கொடுத்தேன். காலங்கள் சென்றது..சினிமா வாய்ப்புகள் குறைந்தது. திரும்பிப்பார்த்தபோது ஒன்றும் இல்லாதவளானேன். அக்கா ஒண்ணுமே திருப்பித்தரவில்லை.
அப்புறம் எப்படி வாழ்க்கையை ஓட்டுறீங்க?
வாழ்க்கையை ஓட்டுறதுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போ மாசத்துல ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். எப்படின்னு கேட்குறீங்களா? கன்னடா, தெலுங்கு, தமிழ் சினிமாக்கள்ல சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். மாதம் ஒரு நாள் ஷூட்டிங் போனாலே போதும் . 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதோ இந்த பிளாட்டுக்கு மாத வாடகை 11 ஆயிரம் ரூபாய். நான் எந்த பிராப்ளமும் இல்லாம வீட்டு வாடகையும் கொடுத்து, கார் டியூவும் கட்டிட்டு சந்தோஷமா வாழ்ந்திட்டு இருக்கேன். எனக்கு பெரிய செலவொண்ணும் இல்லை. 5 நட்சத்திர ஹோட்டலுக்கு போகமாட்டேன். ஷாப்பிங் போகமாட்டேன். அப்புறம் என்ன செலவு எனக்கு?
அன்றைக்கு அதுமாதிரி கிளாமர் கேரக்டரில் நடிப்பதற்கு உங்களை வற்புறுத்தினாங்களா?
இல்லை. எனக்குப்பணம் தேவை. நான் முக்கால்வாசி உடையணிஞ்சுதான் நடிச்சேன். நான் நிர்வாணமாக ஒண்ணும் நடிக்கலைதானே. அப்படி நடிப்பதற்கு என்னை யாரும் வற்புறுத்தவும் இல்லை. அப்படி சொல்லியிருந்தா கண்டிப்பா நான் அப்படி நடிச்சிருக்கவும் மாட்டேன்.
(தொடரும்..)
பேட்டி: க்ருஷ்ணவேணி தினேஷ்