சென்னை:
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவை மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எளிதாக இ பாஸ் கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது இன்று முதல் அமலுக்கு வந்தது.
கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் எட்டு மாதங்களுக்கு மேலாக சிக்கித் தவிக்கிறது. கொரோனாவைவிட அதன் நிமித்தமாக அமல்படுத்தப்பட்டுள்ள
பொது முடக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. உலக நாடுகள் பல பொது முடக்க அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளதுடன், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பொது முடக்கதால் வைரஸ் பரவலை தடுக்க முடியாது, சற்று தள்ளிப்போடவே முடியும் என சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முகக் கவசம் அணிதம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவை மிகக் கறாராக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு நிபந்தனைகளுடன் பொது முடக்க அறிவிப்பு அமலில் உள்ளது. பொது போக்குவரத்து ரத்து, மாவட்ட எல்லையைத் தாண்ட வேண்டுமானால் இ பாஸ் பெற வேண்டும் உள்ளிட்டவை மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
வணிக நிறுவனங்கள், கடைகள், சந்தைகள் ஆகியவை திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும் மேற்சொன்ன காரணங்களால் பணிக்குச் செல்லக் கூடியவர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள பெரிய நகரங்களுக்கு அன்றாடம் வேலைக்கு சென்று திரும்புவர்கள் ஏராளம். இவர்களது பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. அதிலும் பெண்களின் நிலை படுமோசம். அண்மையில் தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களை இரண்டு, மூன்றாக பிரித்தது. இதனால் மாவட்ட எல்லைகள் சுருங்கியுள்ளதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
சரியான காரணங்கள் சொல்லப்பட்டாலும் இ பாஸ் பெறுவதில் சிக்கல், போலி இ பாஸ் அச்சடித்தல், லஞ்சம் வாங்கிக் கொண்டு இ பாஸ் விநியோகம் என பல புகார்களும் இது தொடர்பாக எழுந்தது.
இந்நிலையில் பொதுமக்கள், எதிர் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆணையம் வரை எதிர்ப்பு தெரிவித்ததால் இ பாஸ் முறையில் மாற்றம் கொண்டுவருவதாக சில நாள்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 17ஆம் தேதி முதல் இ பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதிகரிக்கும் கொரோனா: ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு!
இன்றிலிருந்து இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இது தற்போது வரவேற்பு பெற்றாலும், இதிலும் சில போதாமைகள் உள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், அவசர காலத்தில் வேறு யாரையேனும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அன்றாடப் பணிகளுக்காக மாவட்ட எல்லைகளை கடப்போர் மிக அதிகமாக இருக்கும்போது ஒவ்வொருமுறையும் விண்ணப்பிப்பது நேர விரயம் அன்றி வேறில்லை.
அனைவருக்கும் இ பாஸ் அறிவிப்பின் காரணமாக மாவட்ட எல்லைகளில் இனி அணிவகுத்து நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் தேவையற்ற கூட்டத்தை அரசே ஏற்படுத்திவிடுவதாக அமையும். எனவே இந்த முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பல தரப்பிலிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று அரசு தற்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக இ பாஸ் ரத்து அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.