புதுடெல்லி: பொதுமக்கள் அனைவரும் தயக்கமின்றி, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் டெல்லியில் முதன்முதலில் கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்.
ஜனவரி 16ம் தேதி, கொரோனா தடுப்பு மருந்து வழங்கல், நாடு முழுவதும் துவங்கப்படவுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் அறிவியல் அறிஞர்களை நம்ப வேண்டுமெனவும், பொய்ப் பிரச்சாரம் செய்வோரின் வலையில் வீழ்ந்துவிடக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து, முன்னுரிமை அடிப்படையில், முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. தடுப்பு மருந்தை வழங்குவதற்கு, டெல்லியில் மட்டும் 89 மையங்கள் அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலபல முன்னேற்பாடுகளை அடுத்து, தடுப்பு மருந்தானது, டெல்லிக்கு அடுத்த 2 நாட்களுக்குள் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.