சென்னை,
தீண்டாமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கூறினார்.
சென்னை நூற்றாண்டு மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 258வது பிறந்தநாள் விழா மற்றும் தியாகராஜ சுவாமிகளின் 250வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை அகில இந்திய தெலுங்கு அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நேற்று சென்னை வந்தார்.
முன்னதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், தென் மண்டல ஏற்றுமதி நிறுவனங்க ளுக்கான விருது வழங்கும் விழா, சென்னையில், நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்ட துணை ஜனாதிபதி, சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதைத்தொடர்ந்து தெலுங்கு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட தலைவர்களை மறக்கக்கூடாது. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, பாரதியார் போன்றவர்களை மறக்கலாது என்றார். அதுபோல பெற்ற தாயாரையும், பிறந்த மண்ணையும், தாய்மொழியையும் எப்போதும் மறக்க கூடாது என்று கூறினார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அதே நேரத்தில் பிறமொழிகளையும் கற்க வேண்டும். இந்தியையும் கற்று கொள்ளுங்கள்; ஆங்கிலமும் முக்கியமாக தேவை. நாட்டில் உள்ள தீண்டாமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், தமிழில் பேசினால் தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என்றார். ஆந்திராவை போன்று, தமிழகத்தில், பிற மொழி பள்ளிகளை ஊக்கப்படுத்த, முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்படும் என ஆளுநர் கூறினார்.