சென்னை: தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியையும் முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தில், இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முதல் 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட 14 லட்சத்து 11 ஆயிரத்து 194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13 லட்சத்து 93 ஆயிரத்து 811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும்,
அடுத்த 10 நாளில் வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் , தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி உள்ள தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளோம்.
மக்களிடையே தடுப்பூசி போடுவதை, வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம்.
வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை அந்தந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் உறுதி எடுத்து செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் வழி காட்டுதலை பின்பற்றி சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று போதுமான சுகாதாரப் பணியாளர்களை வைத்து தடுப்பூசி போடும் பணிகளை 100 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.