ரஜினி வீட்டு நாய் தேர்தலில் நின்றால்கூட, வெற்றிபெற்றுவிடும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியிருக்கிறார்.

அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“கிரானைட் ஊழல் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் சி.பி.ஐ விசாரணைத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது மிகப்பெரிய மோசடி. இது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் காப்பாற்றும் முயற்சி.

கிரானைட் ஊழலில் பல அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது.

இதற்கு சி.பி.ஐ விசாரணைதான் வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நடந்த ஊழலை விசாரிக்க சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஐந்து மாதங்களுக்கு முன்பே தமிழக அரசை எச்சரிக்கை விடுத்தோம். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது என்று அப்போதே சொன்னோம்.

ஆனால் அப்போது  ஓர் அமைச்சர், ‘தமிழ்நாட்டில் டெங்கு இல்லை’ என்றார். இன்னொரு அமைச்சரோ, ‘எங்கள் அம்மா ஆட்சியில் டெங்கு உள்ளே வராது’ என்றார்.

ஆனால், தற்போது டெங்கு தீவிரமாகி மரணங்கள் தொடர்கின்றன. பல முறை சொல்லியும் போராட்டம் நடத்தியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டுகொல்ளவே இல்லை.

இப்போது  ‘11,000 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு; 40 பேர் சாவு’ என்கிறார்.  ஆனால் எங்கல் கணிப்புப்படி 40,000 பேருக்குமேல் டெங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 500 பேராவது பலியாகியிருக்கிறார்கள்.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 50 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

கேரளாவில் மம்முட்டி தேர்தலில் நின்றால் கவுன்சிலர்கூட ஆக முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் வீட்டில் உள்ள நாய் தேர்தலில் நின்றால்கூட வெற்றி பெற்றுவிடும்.  இது நம் தலையெழுத்து” என்று அன்புமணி பேசினார்.