ஊரடங்கு விலக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறப்பு இல்லை..’’
நாடு தழுவிய ஊரடங்கால் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர் குலைந்துள்ளது.
பொருளாதாரத்தைச் சீரமைக்க சில கட்டுப்பாடுகளை நாளை முதல் தளர்த்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான நெறி முறைகளை வழங்க 21 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று இந்த குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளது.
ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனை அறிக்கையாகத் தமிழக அரசிடம் நாளை வழங்க உள்ளது.
சில தொழிற்சாலைகள் பகுதி நேரமாக இயங்க அனுமதி கொடுக்கும் பட்சத்தில், அங்குப் பணி புரிய வேலை ஆட்கள் கிடையாது.
எனவே ஆட்களை ஏற்றி செல்ல, ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை இயக்கலாம் என இந்த குழு பரிந்துரைக்கும் என்று தெரிகிறது.
‘’ ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், மே மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகும் மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கக்கூடாது’’ என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து அறிக்கையில் இடம் பெறும்.
அதனை அரசும் ஏற்றுக்கொள்ளும் என்றே நம்பகமான வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
– ஏழுமலை வெங்கடேசன்