சென்னை

பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்ய கடவுளுக்கு கூட உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கோவை வருமானத்துறை அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட ஒரு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. அதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுவதாக கூறப்பட்டது. அதை ஒட்டி ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியன் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி சுப்ரமணியன், “நிலங்களை கொள்ளை அடிப்பவர்களும், பேராசைக்காரர்களும் பொதுச் சாலைகள், அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகல், மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் கோவில்களை அமைக்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி சாலைகளின் நடுவில் கோவில் கட்டுவதும் அதனால் பொதுமக்கள் துயருறுவதால் அதை இடிக்க அரசு முயலும் போது அதை மதப் பிரச்னை ஆக்குவதும் வழக்கமாகி வருகிறது. இவ்வாறு கட்டப்படும் கோவில்கள் அனுமதி இன்றி கட்டப்படுகின்றன. இதை மாவட்ட மற்றும் வட்ட அரசு அலுவலர்கள் ஊக்குவிக்க கூடாது.

பொது இடங்களை ஆக்கிரமித்து எந்த ஒரு கோவில், தேவாலயம், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களை அமைக்கக் கூடாது. இவை அனைத்தும் ஆக்கிரமிப்பாகும். அத்துடன் சாலைகள், நீர் பிடிப்பு பகுடிகள், நீர் நிலைகள் ஆகியவைகளிலும் வழிபாட்டு தலங்களை அமைப்பது சட்ட விரோதமாகும். இவ்வாறு பொது இடங்களை ஆக்கிரமிக்க கடவுளுக்கே உரிமை இல்லை. ஆகவே பொது இடங்களில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் அகற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.