வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடியே விசாரணைக் கைதி சகாதேவன் பிடிபட்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலியைச் சேர்ந்தவர் சகாதேவன். கடந்த அக்டோபர் மாதம், நகைக்காக மூதாட்டி ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அணிந்திருந்த வேட்டியைப் பயன்படுத்தி நேற்று காலை சிறை சுற்றுச் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றார். இதில் மின் வேலி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கைதி தப்பியது வேலூர் சிறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐம்பது காவலர்கள், சகாதேவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் பதுங்கியிருந்த சகாதேவனை நேற்று மாலை, காவல்துறையினர் கைது செய்தனர்.
தப்பிய பதினோரு மணி நேரத்தில் கைதியை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. சிறையின் பின்பக்கம் இருந்த மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி தப்பிசென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆண்கள் சிறையில் கைதிகளை எண்ணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.