நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள அதிமுகவின் பாரம்பரிய சாதிய வாக்குகளை திமுக பிளந்துவிட்டது என்று அரசியல் அரங்கில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதாவது; மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை, கொங்கு வேளாளர் – அருந்ததியர் ஆகிய 2 சமூகங்களும் காலங்காலமாக பெரியளவில் அதிமுகவிற்கே வாக்களித்து வந்தவர்கள். ஆனால், இந்தமுறை கொங்கு வேளாளர் வாக்குகள் சாதிய அடிப்படையில் தனக்கு அப்படியே கிடைக்கும் என நினைத்த எடப்பாடி பழனிச்ச்சாமியின் கணக்கு தவறாகிவிட்டது.

கடந்த பிப்ரவரி 9ம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரியில் திமுகவின் சார்பாக, அருந்ததியர் அமைப்பான ஆதி தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த ஈஸ்வரனும் கலந்துகொள்ள வைக்கப்பட்டார். அம்மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் மூலம், 2 சமூகத்தினரின் வாக்குகளையும் திமுகவின் பக்கம் திருப்பும் முயற்சி தொடங்கப்பட்டது. மேலும், மேற்கூறிய 2 சமூகங்கள் தவிர, முதலியார் மற்றும் செட்டியார் போன்ற இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக வாக்குகளும் சேர்ந்து, திமுக கூட்டணிக்கு வெற்றியை அளித்துவிட்டது.

ஆதித் தமிழர் பேரவையின் மூலம் நடத்தப்பட்ட மாநாட்டினால், காலங்காலமாக அதிமுகவிற்கு வாக்களித்து வந்த கொங்கு வேளாளர் மற்றும் அருந்ததியர் ஆகியோரின் மனநிலைகளில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.