சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்
நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்பொழுதே, கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் அரசியலில் கோலோச்சியபொழுதே, அவர்களுக்கு மாற்றாக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து தனக்கான ஒரு தனி முத்திரையை பதித்தார், விஜயகாந்த்.
கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டில் சந்தித்த முதல் தேர்தலிலே, எவ்வித கூட்டணியும் இன்றி தனியாக களம் கண்டு, விருதாச்சலத்திலே நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதுவரை, பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட வட தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், தமிழகம் முழுக்க சராசரியாக 8.30 % வாக்குகள் வாங்கி தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் உலகில் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து நின்றார்.
அதற்கு அடுத்துவந்த 2009 ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், மக்களுடனும் ஆண்டவனுடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி தனியாக களம் கண்டார். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று தமிழகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அது சராசரியாக 10.09 % வாக்குகளாக இருந்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் அவர் பெற்ற வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது.
அதுற்கு அடுத்துவந்த 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி கண்டு, 41 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 29 சட்டமன்ற தொகுதிகளில் வென்று எதிர்கட்சித் தலைவரானார். அத்தேர்தல், அவரை தமிழக அரசியல் களத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாற்று போன்ற பிம்பத்தை உருவாக்கியது. அந்த பிம்பமே அவருடைய அரசியல் சரிவிற்கான காரணமாயிற்று.
அதுவரை அவருடன் இருந்த பண்டருட்டி ராமசந்திரன், மாபாய் பாண்டியராஜன் போன்றோர் தேதிமுகவில் இருந்து விலகினர். அவரை சுற்றி, அரசியல் ஆளுமைகளின்றி வெறும் ரசிகர் கூட்டங்கள் சூழ்ந்தன. அவருடைய பெரும் பிம்பமே, பெரும் பாரமாக, அவர் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவருடைய அரசியல் சரிவின் தொடக்கப்புள்ளி அங்கே ஆரம்பித்தது.
2014 பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்தில், கூட்டணியிலே பெரிய கட்சியாக 14 தொகுதிகளில் போட்டியிட்டார்கள். கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றிபெற்றாலும், தேதிமுக ஒரு தொகுதியிலும் வெல்லமுடியவில்லை.
இதற்கடுத்தன, 2016 சட்டமன்ற தேர்தலில், திமுகவுடனான கூட்டணி அமைவதற்கான அனைத்து சூழலும் அமைந்துவந்தது. கலைஞரும், பலம் நழுவி பாலில் விழும் என்றார். ஆனால், தமிழக அரசியலின் சரியான புரிதல் இல்லாததாலும் , அரசியல் சூழ்ச்சிகள் புரியாததாலும் மக்கள் நல கூட்டணி கண்டார். வெற்றி காணமுடியாத கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஆனார். அத்தேர்தல், அவருடைய அரசியல் வாழ்வின் அஸ்தமனத்திற்கான அடித்தளமிட்டது. அவருடைய கூட்டணி தோற்றதுமில்லாமல், அவருடைய வாக்குவங்கியும் 3 % கீழானது. இதனூடே, அவருடைய உடல்நிலையும் சீர்கெட்டது.
2016க்கு பின்னான காலகட்டத்தில் தமிழக அரசியலில் அவருடைய ஆளுமை குறைந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில், அதிமுக வின் அணுகுமுறை மாறியது. கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இணைந்த பின்னரே கடைசியில் தேதிமுக இணைத்துக்கொள்ளப்பட்டது. அங்கு, தேதிமுக பாடம் கற்றிருக்க வேண்டும். தங்களை அதிமுக எதிர்வரும் காலங்களில் எப்படி கையாளப்போகிறது என்பதை உணர்ந்திருக்க வேண்டும். மாறாக, அவர்களின் மாயையில் இருந்து ஏனோ வெளிவராமலே இருந்தனர்.
தேதிமுக தங்களுக்கான மாற்று வாய்ப்புகளை சிந்திக்காமல் அதிமுகவிற்கான அழைப்பிற்காக 2021 தேர்தலில் இதுவரை காத்திருந்ததே, அவர்களின் அரசியல் முதிற்சியின்மையை காட்டுகிறது. அவர்களுக்கு கூட்டணியில் பங்களிக்காதது மட்டுமன்றி மற்ற வாய்ப்புகளையும் முடக்கினார், அதிமுகவினர்.
இருப்பினும் காலம், TTV தினகரன் வாயிலாக மற்றுமொரு வாய்ப்பை ஏற்படுத்த இருக்கிறது. 2021 தேர்தலுக்கு பின்னான காலகட்டத்தில், அதிமுகவில் ஏற்பட போகும் குழப்பத்தில், தேதிமுகவிற்கான அரசியல் மறுவாழ்வுக்கான வாய்ப்பு இருக்கும். அதற்கு, தற்போதைய சூழ்நிலையால் தனது அரசியில் இருப்பை தக்க வைத்துக்கொள்வது அவசியமே. அதை கருத்தில்கொண்டு பார்த்தால், தினகரனுடனான கூட்டணி அவர்களுக்குரிய மரியாதையையும் அரசியலில் அங்கீகாரத்தையும், எதிர் காலத்திற்கான வாய்ப்பையும் திறந்து வைக்கும்.
மாறாக, தேதிமுக தனியாக களம் கண்டால், தேர்தலுக்கு பின்னாக காணாமல் போகும் கட்சிகளில் அவர்களும் ஒருவராவார்கள். இத்தேர்தல், தேதிமுகவிற்கான அரசியல் சரிவிற்கான முற்றுப்புள்ளியாக அமையுமா அல்லது அவர்களுடைய தமிழக அரசியலிற்கான முற்றுப்புள்ளியாக அமையுமா என்பதை அவர்களுடைய தற்போதைய தேர்தல் கூட்டணி முடிவும் , காலமும் முடிவு செய்யும்.